×

சுசீந்திரம் கோயில் மார்கழி திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்: 29ம் தேதி தேரோட்டம்

சுசீந்திரம்: சுசீந்திரம் தாணுமாலயசுவாமி கோயிலில் மார்கழி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு நேற்றுரமுன்தினம் கோயிலை சுற்றியுள்ள 16 கிராமங்களில் உள்ள பிடாகைகளுக்கு மஞ்சள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மாலை 4 மணிக்கு கோட்டாறு பட்டாரியர் சமுதாயத்தில் இருந்து மேளதாளம் முழங்க கொடி பட்டம் ரதவீதியை சுற்றி வந்து கோயில் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. விழாவின் முதல் நாளான நேற்று அதிகாலை மாணிக்கவாசகர் பூஜை நடந்தது. காலை 9 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. இதில் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம், அதிமுக மாவட்ட செயலாளர்கள் அசோகன், ஜாண்தங்கம், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் விஜய் வசந்த், கோயில்களின் இணை ஆணையர் அன்புமணி, கண்காணிப்பாளர் ராமச்சந்திரன், மேலாளர் சண்முகம், அறங்காவலர் குழு தலைவர் சிவகுற்றாலம், உறுப்பினர்கள் ஜெயச்சந்திரன், அழகேசன், சதாசிவம் மற்றும் கட்சி பிரமுகர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
2ம் திருவிழாவான இன்று காலை 4 மணிக்கு விநாயகர் மூஷிக வாகனத்தில் வீதியுலா வரும் நிகழ்ச்சி, 8 மணிக்கு பூங்கோயில் வாகனத்தில் சந்திரசேகரர் திருவீதியுலா வருதல், இரவு 9.30 மணிக்கு புஷ்பகவிமான வாகனத்தில் வீதியுலா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது.

3ம் திருவிழாவான 23ம் தேதி இரவு 10.30 மணிக்கு கற்பக விருட்சக வாகனத்தில் சுவாமி திருவீதியுலா வருதல், தொடர்ந்து கோட்டார் வலம்புரிவிநாயகர், மருங்கூர் சுப்பிரமணியசுவாமி, வேளிமலை குமாரசுவாமி ஆகியோர் தமது தாய் தந்தையரின் விழாவில் பங்கேற்பதற்காக வரும் மக்கள்மார் சந்திப்பு நிகழ்ச்சி நடக்கிறது. 5ம் திருவிழாவான 25ம் தேதி பஞ்சமூர்த்தி தரிசனம், கருட தரிசனம், 7ம் திருவிழாவான 27ம் தேதி இரவு 10.30 மணிக்கு கைலாச பர்வத வாகனத்தில் சுவாமி வீதியுலா வருதல், 9ம் விழாவான 29ம் தேதி காலை 8.30 மணிக்கு தேரோட்டம், இரவு 12 மணிக்கு சப்தாவர்ண காட்சி, 10ம் விழாவான 30ம் தேதி காலை ஆருத்ரா தரிசனம், மாலை 5 மணிக்கு நடராஜமூர்த்தி திருவீதியுலா வருதல் நடக்கிறது.

Tags : Suchindram Temple Markazhi Festival ,Therottam ,
× RELATED ஆலங்குடி அருகே கல்லாலங்குடி முத்துமாரியம்மன் கோயில் சித்திரை தேரோட்டம்